Monday, March 7, 2011

இந்தியாவில் செல்போன் உபயோகிப்போர் 77 கோடி


இந்தியாவில் செல்போன் உபயோகிப்போர் 77 கோடி.




            இந்தியாவில் செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 77.11 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஜனவரி மாத நிலவரமாகும். இது தவிர, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கூடுதலாக 1.89 கோடி பேர் செல்போன் சந்தாதாரர்கள் ஆகியுள்ளனர். 
           இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தகவலின் படி கம்பியில்லா தகவல் சாதனம் (செல்போன்) உபயோகிப்போர் எண்ணிக்கை 2.52 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
           டிசம்பர் மாதத்தில் செல்போன் உபயோகிப்போர் எண்ணிக்கை 75.21 கோடியாக இருந்தது. ஜனவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 77.11 கோடியாக அதிகரித்துள்ளது. நகர்ப்புற சந்தாதாரர்களின் எண்ணிக்கை 66.65 சதவீதத்திலிருந்து 66.42 சதவீதமாகக் குறைந்துள்ளதாக டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் கிராமப்புறங்களில் செல்போன் உபயோகிப்போர் விகிதம் 33.35 சதவீதத்திலிருந்து 33.58 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.இதன் மூலம் தரைவழி தொலைபேசி, செல்போன் உபயோகிப்போர் எண்ணிக்கை 80.61 கோடியாக அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தைக் காட்டிலும் 2.39 சதவீதம் கூடுதலாகும்.
          மொத்தமுள்ள 77.11 கோடி வாடிக்கையாளர்களில் 54.86 கோடி பேர் மட்டுமே செல்போனை அதிகம் உபயோகிப்பவர்களாவர். மற்றவர்கள் எப்போதாவது உபயோகிப்பதாக தெரிவித்துள்ளது.
          பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு புதிதாக 33 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் இந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை 15.58 கோடியாக உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் புதிதாக 32 லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் இந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை 12.87 கோடியாக உயர்ந்துள்ளது. வோடபோனில் புதிதாக 31லட்சம் வாடிக்கையாளர்கள் சேர்ந்ததில் அந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை 12.73 கோடியாக உயர்ந்தது.
          புதிய நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை வெகுவாக சரிந்துள்ளது. வீடியோகான் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 6.89 சதவீதம் சரிந்தது. 10 லட்சம் வாடிக்கையளர்கள் வெளியேறியதில் இப்போது 60 லட்சம் வாடிக்கையாளர்களே வீடியோகானில் உள்ளனர். லூப் டெலிகாம் நிறுவனத்தில் புதிதாக 17,541 வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர். இந்நிறுவனத்துக்கு 30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இணையதளம் உபயோகிப்போரின் எண்ணிக்கை 2.70 சதவீதம் அதிகரித்து 1.12 கோடியாக உயர்ந்துள்ளது.